July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

27 ம் திகதி விடுதலையாகின்றார் சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுர் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் சசிகலா 27ம் திகதி விடுதலையாவதற்கான வாய்ப்புகள் உள்ளன என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் சசிகலாவும் இளவரசியும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் ரூபாவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினர். இதையடுத்து சசிகலா தனக்கு சிறை விதிமுறையின்படி சலுகை காட்டி, முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சிறைத்துறையில் மனு அளித்தார். அந்த மனு பரிசீலனையில் உள்ள நிலையில், சசிகலா வருகிற 27-ஆம் திகதி விடுதலையாக உள்ளார் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சிறைத்துறை தெரிவித்துள்ளது.

27 ஆம் திகதி எந்த நேரத்தில் அவர்களை விடுதலை செய்வது என்பது குறித்து பொலிஸார் ரகசியமாக ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. மேலும், சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும்போது அவரது பாதுகாப்பு கருதி கர்நாடக மாநில எல்லைக்குள் தமிழகத்தில் இருந்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இதேவேளை,சசிகலாவின் விடுதலை அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சசிகலா வெளியே வருவதற்கும் அதிமுக பொதுக்குழு கூடுவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் கூட்டணி மற்றும் பணிகள் குறித்து ஆலோசிக்கவே பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுகிறது என்றும் சசிகலா குறித்து பேசுவதற்காக அல்ல என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.