கேரளா, ராஜஸ்தான்,ஹரியானா உள்ளிட்ட 6 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது .
இந்தியாவின் பல மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி உள்ள நிலையில் ராஜஸ்தானில் ஏராளமான காகங்கள் உயிரிழந்துள்ளன. பறவைக்காய்ச்சல் காரணமாகவே ராஜஸ்தானில் ஐந்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் காகங்கள் உயிரிழந்துள்ளதாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது .
தலைநகர் டெல்லியில் சில காகங்கள் உயிரிழந்ததை அடுத்து அங்கு பறவை காய்ச்சல் பரவி இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து காகங்களின் உடல் மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன .
அண்டை மாநிலங்களிலிருந்து பறவை காய்ச்சல் பரவிவிடக்கூடாது என்பதற்காக மகாராஷ்டிராவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது .
மேலும் ஹரியானாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் பண்ணைகளில் இருந்த நான்கு லட்சம் கோழிகள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .இந்நிலையில் பறவைக்காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோழிகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது .
பறவை காய்ச்சல் பரவி வருவதால் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் முன்னெச்சரிக்கையாக வனவிலங்குகள் சரணாலயம் மூடப்பட்டுள்ளது .
மத்திய பிரதேசத்தில் விலங்கியல் பூங்காவில் பறவைகளுக்கு நடைபெற்ற சோதனையில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளா உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து கோழி மற்றும் முட்டை கொண்டுவர தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
மேலும் ஹிமாச்சல பிரதேசம் குஜராத்திலும் பறவை காய்ச்சல் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டிருக்கிறது .
மேலும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மத்திய குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.