மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் பேச்சுக்கு இடம் இல்லை என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டங்களை திரும்பப்பெறும் கோரிக்கையை தவிர விவசாயிகளின் வேறு எந்த வேண்டுகோளையும் பரிசீலிக்க தயார் என அரசு கூறியிருக்கிறது’ என்று தெரிவித்தார்.
இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற விவசாயிகளின் பிரதான கோரிக்கை தொடர்பாக தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், இன்றைய தினம் இடம்பெறும் பேச்சுவார்த்தை நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் இன்றைய பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எட்டப்படும்? என்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது எனவும், பேச்சுவார்த்தையில் எந்த விடயங்கள் விவாதிக்கப்படுகிறது என்பதை பொறுத்தே அது அமையும் எனவும் வேளாண் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், நேற்று முதல் பிரமாண்ட டிராக்டர் பேரணியைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணியைத் தொடர்ந்துள்ளனர்.
குடியரசு தினத்தில் டெல்லியின் அனைத்து பாதைகளையும் முடக்கும் வகையில் டிராக்டர் பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளதுடன் அதற்கான ஒத்திகையை நடத்தி வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அந்த விவசாயிகளுடன் எட்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதேவேளை விவசாயிகளின் டிராக்டர் பேரணியால் டெல்லி நகரை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.