July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெல்லி எல்லைகளில் ‘டிராக்டர் பேரணி’ நடத்திய விவசாயிகள்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.

இந்திய குடியரசு தினம் அன்று நடைபெறும் அணிவகுப்பு மரியாதைக்கு எதிராக டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக ஏற்கனவே விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேச மாநில விவசாயிகள் இந்தப் பேரணியை ஒத்திகைக்காக முன்னெடுத்துள்ளனர்.

மேலும் அனைத்து மாநில ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிட்டு மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாகவும் விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

அத்தோடு தங்களது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் குடியரசு தினத்தன்று டெல்லி முற்றுகையிடப்படும் எனவும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசுடனான 8ஆம் கட்ட பேச்சுவார்தைகளும் தோல்வியை சந்தித்த நிலையில் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

இதில் தீர்வு ஏற்படாவிட்டால், குடியரசு தினத்தன்று டெல்லி ராஜபாதையில் டிராக்டர் அணிவகுப்பை பிரமாண்டமாக நடத்தப் போவதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

ஹரியானாவின் பால்வால் என்னும் இடத்திலிருந்து திக்ரி, சிங்கிரி சோதனைச் சாவடிகள் வரை விவசாயிகள் இந்த டிராக்டர் பேரணியை முன்னெடுத்தனர்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டே வருகிறது.

எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் குடியரசு தின நிகழ்வுகளுக்காக டெல்லிக்கு உயர் அதிகாரிகள், பிரபலங்கள், முக்கியஸ்தர்கள்  வருகைத்தரவுள்ள நிலையில் அன்றைய தினம் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெற்றால் அவர்களுக்கு பெரும் சவாலாகவே அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.