இந்தியாவின் பல மாநிலங்களில் பரவிவரும் பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய அரசால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேரளா, ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி உள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான பறவைகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கேரளாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய அரசு, உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றை ஆலாபுழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த இரு மாவட்டங்களிலும் இதுவரை 24 ஆயிரம் வாத்துக்கள் பறவை காய்ச்சலால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, தொடர்ந்து பத்து நாட்களுக்கு இந்தப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கேரள அமைச்சர் ராஜூ தெரிவித்திருக்கிறார்.
இந்த பகுதிகளில் கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் சுமார் 45 ஆயிரம் வாத்துக்களும், கோழிகளும் அழிக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
கேரளா மட்டுமல்லாமல் பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஹரியானா உள்ளிட்ட ஏனைய மாநிலங்களுக்கும் மத்திய அரசினால் உயர்மட்ட குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஹிமாச்சல பிரதேசம் ,ஹரியானா, ராஜஸ்தான் ,மத்திய பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களில் பல்லாயிரக்கணக்கான பறவைகள் செத்து மடிந்துள்ளன.
இதனை அடுத்து அண்டை மாநிலமான தமிழகத்திலும் எல்லைகள் மூடப்பட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் பறவை காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், அந்த மாநில அரசு அதை மாநில பேரிடராக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.