இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை இலங்கைக்கு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தில், இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்தபோதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய தடுப்பூசிகளின் சிகிச்சை மதிப்பீடுகளைத் தொடர்ந்து, அவற்றை பெற்றுக்கொள்வது குறித்து இலங்கை கவனம் செலுத்தும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்திய தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்து, இந்தியா ஏனைய நாடுகளுக்கு விநியோகிக்க ஆரம்பிக்கும் போது, இலங்கைக்கு முன்னுரிமை வழங்கும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்களுக்கு மேலதிகமாக, இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மேம்பாடுகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை உட்பட பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டுள்ளனர்.