October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கேரள மாநிலத்தில் பரவும் பறவை காய்ச்சலால் தமிழகம் அச்சத்தில்

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு, பள்ளிப்பாடு,கருவாற்றா பகுதிகள் மற்றும் கோட்டயம் மாவட்டங்களின் பல பகுதிகளில் இதுவரை 12 ஆயிரத்திற்கும் அதிகமான வளர்ப்பு வாத்துகள் திடீரென இறந்துள்ளன.

இதைத் தொடர்ந்து இறந்த வாத்துக்களின் உடல்கள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்து பார்த்ததில் பறவை காய்ச்சல் எனப்படும் எச் 5 என் 1 வைரஸ் தாக்கி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இறந்துபோன வாத்துக்கள் இருந்த பகுதியை சுற்றிலும் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த கோழிகள்,வாத்துக்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.

கேரளாவில் ஏற்பட்டது போல ராஜஸ்தான் மற்றும் இமாச்சல் பிரதேச மாநிலத்தில், காங்க்ரா மாவட்டத்தின் பாங் அணை பகுதியில் திடீரென்று 1400 க்கும் மேற்பட்ட வாத்துக்கள் இறந்து கிடந்தன. இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதிக்கு 9 கிலோமீட்டர் சுற்றளவிற்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இந்தப் பறவைகளின் உடல்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. முடிவுகள் விரைவில் தெரியவரும்

இதைத் தொடர்ந்து கேரள மாநிலத்திலிருந்து வரும் எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்ட பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும் கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துக்களை தமிழகம் கொண்டுவரவும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சற்றே குறைந்த நிம்மதியில் இருக்கும் வேளையில் ,தெரியாமல் பரவும் பறவைக் காய்ச்சல் நோய் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.