July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விவசாயிகளின் ஏழாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவு

டெல்லியில் விவசாயிகளுக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது சுமுக உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் நவம்பர் 26 முதல் டெல்லியை முற்றுகையிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகள் முன்வைக்கும் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

பேச்சுவார்த்தையின்போது போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் எழுந்து நின்று 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஏழாம் கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் மீண்டும் விவசாயிகளுடன் எட்டாம் திகதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் டெல்லி விஞ்ஞான் பவனில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் மத்திய அமைச்சர்கள் நரேஷ் கோயல், நரேந்திர சிங் தோமர் ஆகியோர் விவசாயிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.

விவசாய சட்டத்தில் உள்ள ஒவ்வொரு அம்சங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்க அமைச்சர்கள் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்த விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என உறுதியாக வலியுறுத்தினர் .

இதனால் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என்பதால் மீண்டும் அடுத்த கட்டமாக வரும் 8ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.