திமுக இரண்டாக பிளவுபடும் நேரம் தற்போது வந்து விட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக ஆட்சிக்கு வருவதென்பது கானல்நீர் என்றும் கூறியுள்ளார்.
இதனை மு.க. அழகிரியே தெளிவுபடுத்தி கூறி இருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
கலைஞர் கருணாநிதியின் மகனான மு.க அழகிரி தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசியிருந்தார். அதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராக எப்போதுமே வரமுடியாது என கூறியிருந்தார்.
மேலும் திமுகவில் நடைபெற்ற உட்கட்சிப் பூசல்கள் குறித்தும் அழகிரி குற்றஞ்சாட்டியிருந்தார் .இதனை வைத்தே திமுக இரண்டாகப் பிளவுபடும் தருணம் வந்து விட்டதாக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் மு.க அழகிரி எந்த கட்சிக்கு சார்பாக செயலாற்ற போகிறார் அல்லது தனி கட்சி ஆரம்பிக்கப் போகிறாரா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
ஆனாலும் தன்னுடைய முடிவுக்கு தொண்டர்கள் ஆதரவு தருமாறு அவர் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறி இருக்கிறார் .
திமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் குறித்தும் குடும்ப பிரச்சினை குறித்தும் வெளியில் உள்ள அரசியல் விமர்சகர்களும் அரசியல் கட்சியினரும் தற்போது உன்னிப்பாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.