மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்வரும் 14 ஆம் திகதி சென்னைக்கு வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்போது அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பிருப்பதாவும் கூறப்படுகிறது.
சென்னையில் துக்ளக் இதழின் 51 ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார் அமித் ஷா.
அவரின் இந்த வருகை விழாவுக்காக மட்டுமல்ல நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்களும் இதில் வகுக்கப்படும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மீண்டும் தமிழக பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ள அமித் ஷா,இதன்போது சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை உறுதி செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும் அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசி உடன்பாடு எட்டப்படும் எனவும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அமித் ஷாவின் சென்னை வருகை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தற்போது கூட்டணிக் கட்சிகள் எனக் கூறிக்கொள்ளும் பாஜக- அதிமுக இடையே ஒரு முரண்பட்ட நிலை இருப்பதை அவர்களின் தேர்தல் பிரசாரங்களில் காணமுடிகிறது .
மேலும் தொகுதி பங்கீடு,முதலமைச்சர் வேட்பாளர் யார் ?,கூட்டணிக்கு தலைமை யார் ?என்ற இழுபறி நிலையில், இரு தரப்பும் மாறிமாறி வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளன.
இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அமித் ஷாவின் சென்னை வருகை முற்றுப்புள்ளி வைக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப் போவது இல்லை என்ற அறிவிப்பும் தற்போது பலத்த ஏமாற்றத்தையே அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் சென்னை வரும் அமித் ஷா என்ன மாதிரியான அரசியல் வியூகங்களை வகுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே நவம்பர் 21 இல் தான் சென்னை வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசார பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், அமித் ஷா தமிழகம் வருவது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் அமித் ஷா ,நடிகர் ரஜினிகாந்தை சந்திக்கலாம் என்ற ஒரு தகவலும் பரபரப்பாக பேசப்படுகிறது. அவரிடம் அமித் ஷா தேர்தலுக்கு ஆதரவு கேட்கலாம் எனவும் ஒருசாரார் தரப்பில் கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமித் ஷாவின் அரசியல் வியூகம் எடுபடுமா என்பது கேள்விக்குறியே?