November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்துகள் இரண்டும் 110 வீதம் பாதுகாப்பானவை’

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இரு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளும் 110 வீதம் பாதுகாப்பானவை என இந்தியாவின் மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அமைப்பின் தலைமை அதிகாரி விஜே சொமானி தெரிவித்துள்ளார்.

இரண்டு மருந்துகளிற்கு அவசர அனுமதியை வழங்கியமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சேரம் நிறுவகம் தயாரிக்கும் கொவிசீல்டும், பாரத் பயோடெக்சின் தயாரிக்கும் கொவக்சினும் 110 வீதம் பாதுகாப்பானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிய சந்தேகம் காணப்பட்டாலும் நாங்கள் எந்த மருந்திற்கும் அனுமதி வழங்கமாட்டோம் என குறிப்பிட்டுள்ள அவர், மருந்துகள் இரண்டும் 110 வீதம் பாதுகாப்பானவை என குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்சீல்ட் 70 வீதம் பயனளிக்கின்றது. கொவக்சின் பாதுகாப்பானது மற்றும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இரண்டு மருந்துகளிற்கும் அவசர அனுமதி வழங்கப்பட்டுள்ளமை அனைத்து இந்தியர்களையும் பெருமைப்படவைக்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு மருந்துகளையும் இரண்டு டோஸ்கள் வழங்கவேண்டும்,இரண்டு முதல் எட்டு டிகிரி செல்சியசில் சேமிக்கவேண்டும் என மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஸ்வர்த்தன் தெரிவித்துள்ளார்.

ஒருகோடி சுகாதார பணியாளர்களுக்கும்,இரண்டு கோடி முன்னரங்க பணியாளர்களுக்கும் மருந்து வழங்கப்படுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.