இந்திய மத்திய அரசு கொண்டுவந்த விவசாய சட்டங்களை எதிர்த்து ஒரு மாதத்துக்கும் மேலாக விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகிறார்கள்.
கடந்த புதன்கிழமையோடு 6 கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்திருக்கின்றன. இருப்பினும் தெளிவான ஒரு முடிவு எட்டப்படவில்லை.
ஜனவரி 4 ஆம் திகதி நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படவில்லை எனில் ஹரியானா மாநிலத்தில் உள்ள பெற்றோல் பங்குகள், மால்கள் ஆகியவற்றை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஜனவரி 26 அன்று நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவிற்கு போட்டியாக டிராக்டர்கள் அணிவகுப்பை நடத்தவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய குடியரசு தினத்தின் போது ஜனாதிபதி இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து இந்திய தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார்.
மேலும் முப்படைகளின் சார்பாகவும் மாநில அரசுகளின் சார்பாகவும் வீரர்கள், போர்த் தளவாடங்கள்,மாநில அரசுகளின் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் என நீண்ட பேரணி நடைபெறும்.இதற்குப் போட்டியாக தான் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.