October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் உருமாறிய கொரோனா: பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் கண்டறியப்பட்ட மரபணு மாற்றம் கண்ட புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான  6 பேர் சில தினங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று புதிதாக 14 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த புதிய வகை வைரஸால் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்கள், இந்த மாதம் 31 ஆம் திகதி வரை இந்தியா வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஜனவரி 7 ஆம் திகதி வரை தடையை நீட்டித்து இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டனிலிருந்து, இந்தியா வந்த சுமார் 33 ஆயிரம் பயணிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், 114 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இவர்களில் எத்தனை பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.