விவசாயிகள் போராட்டத்தினால் தான் மிகவும் மனம் வெதும்பி இருப்பதாகவும், இதற்கு விரைவில் தீர்வு ஏற்படாவிட்டால் தன்னுடைய கடைசி உண்ணா விரதத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்தார்.
விவசாயிகள் பிரச்சினைகளுக்காக கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறேன். ஆனால், மத்திய அரசு அவர்களின் பிரச்சினையை தீர்க்கவில்லை. இதனால் மத்திய அரசின் மீதான எனது நம்பிக்கையும் போய்விட்டது என்று அவர் கூறியுள்ளார்.
விவசாயிகள் தொடர்பான எனது கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என்று ஜனவரி இறுதி வரை பொறுத்திருந்து பார்ப்பேன் எனவும், அதன் பின்பும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், நான் விவசாயிகளுக்காக உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவேன். அதுதான் என்னுடைய கடைசி போராட்டமாகவும் இருக்கும் என்றும் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் போராட்டம் நடத்தும் பஞ்சாப் மாநில விவசாயிகளுக்கு ஆதரவாக, கடந்த 8ஆம் திகதி ஹசாரே ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.