November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை” : நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் கட்சி தொடங்கவில்லை என்றும், அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் கூறிக்கொள்வதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டு இது தொடர்பாக அறிவித்துள்ளார்.

நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும்  என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய கொரோனா தொற்று நிலைமையில் என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. என்னை மன்னியுங்கள் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது உடல்நிலை கருதி தயாரிப்பாளர் திரு.கலாநிதிமாறன் மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்தி வைத்துள்ளார். மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு இரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகையால் என்னுடைய மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர்களின் மேற்பார்வையில் மூன்று நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது எனவும் ரஜினி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதேவேளை, ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஐதராபாத் சென்றேன்.

கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்து கட்டுப்பாட்டோடு இருந்தும் 4 பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரியவந்தது.

உடனே இயக்குனர் படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வித்தார். எனக்கு கொரோனா நெகடிவ் வந்தது.

ஆனால் எனக்கு இரத்தக் கொதிப்பில் அதிக ஏற்றத் தாழ்வு இருந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு இரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது.

அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும். ஆகையால் என்னுடைய மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர்களின் மேற்பார்வையில்  இருக்க நேரிட்டது.

என் உடல்நிலை கருதி படத்தின் தயாரிப்பாளர்,  மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார். இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு, பல கோடி ரூபாய் நஷ்டம். இவை அனைத்துக்கும் காரணம் என்னுடைய உடல் நிலை.

இதை ஆண்டவன் எனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன். நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

மேலும் தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன். நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை.

இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள்.

உண்மையையும், வெளிப்படை தன்மையையும் விரும்பும், என் நலத்தில் அக்கறையுள்ள, என்மேல் அன்பு கொண்ட என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களும், தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என ரஜினிகாந்த் தனது உத்தியோகப்பூர்வ அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.