November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கூட்டணி ஆட்சிக்கு தமிழகத்தில் இடமில்லை’

தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனவும் இதுவே அதிமுகவின் நிலைப்பாடு எனவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கின்ற நிலையில்,அதிமுக மற்றும் பிஜேபி கூட்டணி தொடரும் என்று முன்னரே மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்தார்.

தமிழகத்தைப் பொருத்தவரை தேசிய கட்சிகளுக்கு தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கான வாக்குவங்கி இல்லை. காங்கிரஸும், பிஜேபியும் , திமுக அல்லது அதிமுகவை நம்பியே இங்கு களம் காணும் சூழ்நிலை இருக்கிறது.

ஆகையால் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி என்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் என்றும் அறிவித்து, அதிமுக தலைமையில் பிஜேபி, பாமக, தேமுதிக என்று கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராகி வந்தது.

ஆனால், தமிழ்நாடு பிஜேபி மாநில தலைவர் எல். முருகனோ,சமீபகாலமாக முதல்வர் வேட்பாளரை பிஜேபி அறிவிக்கும் என்றும் கூட்டணி ஆட்சி என்றும் போகுமிடமெல்லாம் கூறி வந்தார்.

இதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்கும் கட்சிகள் கூட்டணியில் இருக்கலாம் என்று அதிரடியாக பதில் அளித்தார்.

ஆனாலும் எல்.முருகனோ முதல்வர் குறித்த சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து, நேற்று நடைபெற்ற அதிமுகவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அதிமுகவின் மூத்த தலைவரும் இணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி. முனுசாமி, கூட்டணி ஆட்சி கிடையாது. எடப்பாடி தான் முதல்வர் என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

இதற்கிடையில் இன்று திடீரென எல்.முருகன் முதல்வரை சந்தித்தார். பின்பு பாஜக அதிமுக கூட்டணி தொடரும் என்று அறிவித்தார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு முதலமைச்சர் கூட்டணி அமைச்சரவை கிடையாது என திட்டவட்டமாக அறிவித்தார்.

மேலும் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பெயரில் திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நாளை முதல் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒருவழியாக அதிமுக கூட்டணியில், முதல்வர் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.