July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக முதலமைச்சருடன் நடிகர் விஜய் சந்திப்பு

மாஸ்டர் படத்தை வெளியிடுவது தொடர்பாக நடிகர் விஜய், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, இளைய தளபதி விஜய் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் தான் மாஸ்டர். இந்த படம் கொரோனாவிற்கு முன்பே படப்பிடிப்பு முடிந்து பொங்கல் பண்டிகைக்கு வெளியிட தயாராகவுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியுள்ளனர்.

மேலும் இந்த சந்திப்பின்போது ஏற்கனவே திரையரங்குகளில் 50 சதவீதமாக இருக்கும் இருக்கைகளை 100 சதவீதமாக மாற்றி அமைக்கவும், சிறப்பு காட்சிகளை அனுமதிக்கவும் விஜய் தரப்பில் இருந்து கோரிக்கை முன் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து படக்குழு ஜனவரி 13 ஆம் திகதி மாஸ்டர் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிறது என்ற தகவலை உறுதிப்படுத்தினர்.

அதேபோல தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், ஜனவரி 13ஆம் திகதி மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கொரோனா பாதிப்பிற்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகும் மிகப்பெரிய படம் இது. இதற்காக விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கொரோனா நிலைமையினால் படத்தை வெளியிட முடியாமல் ஓடிடியில் வெளியிடலாம் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவிய  நிலையில் தற்போது திரையரங்கில் மட்டுமே இந்த படத்தை வெளியிடுவோம் என படக்குழு திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.