தமிழக அரசாங்கத்தின் ‘கல்வி’ தொலைக்காட்சியில் திருவள்ளுவர் புகைப்படம் காவி உடையில் சித்திரிக்கப்பட்டமை குறித்து தமிழகத்தில் கடும் சர்ச்சை உருவாகியுள்ளது.
ஆறாம் தர மாணவர்களுக்கான சமூக அறிவியல் பாடங்கள் அரசாங்கத்தின் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வேளை திருக்குறள் மேற்கோள் காட்டப்பட்டதாகவும் அவ்வேளை திருவள்ளுவர் காவி உடையில் காண்பிக்கப்பட்டார் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனை தொடர்ந்து கல்வித்துறையில் தொடர்ச்சியாக காவிமயமாக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தவறுக்கு காரணமான ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து கல்வித்துறை அளித்துள்ள விளக்கத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்கள் அனைத்தையும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள் தான் தயார் செய்வதாகவும் குறிப்பிட்ட திருவள்ளுவரின் உருவப்படம் தவறுதலாக இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறையில் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் குறித்து அவ்வபோது சில சச்சைகள் எழுந்து வருகின்றன.
ஏற்கனவே ஒரு முறை பாரதியாரின் உடையில் காவி சாயம் பூசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.