எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் தான் அதிமுக கூட்டணியில் இருக்கமுடியும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதிமுகவின் தேர்தல் பிரசாரம் நாளைய தினம் சென்னை ராயப்பேட்டை வை.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் பொதுக்கூட்ட அரங்கு அமைக்கும் பணியை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும். தற்போது முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற செய்தி சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் தான் அதிமுக கூட்டணியில் இருக்க முடியும் என கூறியுள்ளார்.
மேலும் எதிர்வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என்றார்.
இதனையடுத்து எம்ஜிஆர் நல்லாட்சி செய்யவில்லை என சீமான் பேசியது குறித்து கேட்ட போது, வரலாறு தெரியாமல் சீமான் பேசுவதாகவும் ,புரட்சித் தலைவரை தொட்டால் கெட்டான் என்றும் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
எதிர்வரும் சட்டமன்றத்தேர்தலுக்குகாக ஆளுங்கட்சி ,எதிர்க்கட்சி என ஏனைய கட்சிகளும் தேர்தல் பிரசாரங்களை தொடங்கி தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.