குறைந்தபட்சம் நடிகர் சூர்யா அளவுக்காவது விஜய் குரல் கொடுத்துவிட்டு அரசியலுக்கு வரட்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
ரஜினி, கமல் மற்றும் விஜய் ஆகியோரின் அரசியல் பிரவேசத்திற்கு அண்மைக் காலமாக சீமான் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றார்.
அதில் தமிழக மக்கள் ரஜினிக்கும் கமலுக்கும் கொடுக்கும் அடியில், விஜய் கூட நாளைக்கு அரசியலுக்கு வர யோசிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு விஜய் ரசிகர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாகமே சீமான் இவ்வாறு கூறியுள்ளார்.
விஜய் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டு என்ன நடக்கப்போகிறது? மக்களின் தேவைகளுக்காக அரசியல் செய்து, களத்தில் போராடி அரசியலுக்கு வரட்டும் என்றார்.
ஒரு நடிகர் நடிப்பது மட்டுமே நாடாள தகுதி என்பதை நான் ஏற்கவில்லை. ஆரம்ப காலத்தில் இருந்து நடிகர் விஜய்யை தற்காத்து நின்றவன் நான். தியாகங்களை திரைக்கவர்ச்சியில் மூடுவதை நான் ஒருபோதும் ஒப்புக் கொள்ளமாட்டேன் என்றார்.
தகுதிகளை வளர்த்துக்கொண்டு நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும். அதைத்தான் சொன்னேன். குறைந்த பட்சம் நடிகர் சூர்யா அளவுக்காவது விஜய் குரல் கொடுக்க வேண்டும். பொது மக்களுக்காக போராடி தம்பி விஜய் அரசிலுக்கு வரட்டும் என்றார்.
தமிழர்களுக்கு தொடர்பே இல்லாத எம்ஜிஆரும், ரஜினியும் முன்மாதிரி என்று சொல்வதையும் ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.