Photo: DMK/Twitter
பிரதமர் மோடியே வந்து தடைபோட்டாலும் திமுகவின் கிராமசபைக்கூட்டங்கள் தொடரும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின் அண்மையில் ‘விஷன் 200’ என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரத்தினை ஆரம்பித்தார். அதில் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்களை நடத்தி அதில் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்தார்.
இதற்கு மாநில அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. கிராம சபை கூட்டம் என்பது அரசியல் சார்பற்ற, கிராமத்தின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள கிராம மக்களை ஒன்றிணைக்கும் ஒரு சபையாகும்.
ஆகவே இதில் அரசியல் பேசக்கூடாது என்று மாநில அரசு கண்டனம் தெரிவித்ததோடு தடை விதித்திருந்தது.
இந்நிலையில், பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள மரக்காணத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், தடையை மீறி ஸ்டாலின் பேசினார்.
அதில் மோடியே வந்தாலும் கிராமசபை கூட்டங்கள் நடத்துவதை தடுக்க முடியாது என்றும், அதிமுக ஊழல் கட்சி என்றும், அவர்களின் ஊழல்களை ஆளுநரிடம் ஆதாரங்களுடன் தந்து இருப்பதாகவும் கூறினார்.
மேலும் திமுக மீது இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார். திமுக நடத்தும் கிராம சபை கூட்டங்களைக் கண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அச்சமடைந்திருப்பதாகவும், அதனாலேயே கிராம சபைக் கூட்டங்களுக்கு திடீர் என தடை போடுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் திமுகவின் கிராமசபைக் கூட்டத்தை எக்காரணம் கொண்டும் அதிமுக அரசால் தடுத்து விட முடியாது. பிரச்சாரத்தையும் வழக்குகளைக் காட்டி முடக்கி விட முடியாது என்றும் கூறினார்.
அதே நேரத்தில் அமைதியான தேர்தலுக்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று சென்னையில் நடைபெற்ற அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள இந்த சூழ்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘கிராம சபை’ கூட்டங்கள் இனி ‘மக்கள் கிராம சபைக் கூட்டம்’ என்ற பெயரில் நடத்தப்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.