நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்திலுள்ள அப்பலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 10 நாட்களாக, ஹைதராபாத்தில் நடந்துவந்த ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டிருந்தார்.
படக்குழுவினர் அனைவருக்கும் இரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டதில், 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
படப்பிடிப்பிற்குப் பின்னர், கடந்த 22 ஆம் திகதி ரஜினிகாந்திற்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லை என உறுதிசெய்யப்பட்டது.
எனினும் ரஜினிகாந்த் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், இன்று ரஜினிகாந்தின் உடல் இரத்த அழுத்தத்தில் மாறுபாடு, உடல் சோர்வு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், இரத்த அழுத்தம் சீராகும் வரை ரஜினிகாந்த் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் எனவும், வேறு எந்த அறிகுறிகளும் அவருக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பான தமிழக அரசியல் சூழலில் கட்சி ஆரம்பிக்க இருந்த தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்சமயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது இவருடைய ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக இருக்கிறது.