
உலக சுகாதார நிறுவனத்தை சீர்திருத்தம் செய்வது தொடர்பில் இந்தியா ஒன்பது அம்ச திட்டமொன்றை முன்வைத்துள்ளது.
சுகாதார நெருக்கடிகள் உருவாகும்போது கண்காணிப்பதற்கான பொறிமுறைகளில் மாற்றங்களை மேற்கொள்வது மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவருக்கு அதிக அதிகாரங்களை வழங்குவது உட்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை இந்தியா முன்வைத்துள்ளது.
இந்தியா தனது யோசனைகளை உலக சுகாதார ஸ்தாபனத்திற்கும் ஐநாவிற்கும் முறைப்படி சமர்ப்பித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிதி மற்றும் நிர்வாகங்களில் மாற்றங்களை மேற்கொள்வது,நிதிகளை பயன்படுத்துவதில் வெளிப்படைதன்மை போன்றவை குறித்தும் இந்தியா யோசனைகளை சமர்ப்பித்துள்ளது.
கொவிட் 19 மருந்து நியாயமான அனைவரும் பெறக்கூடிய விதத்தில் பகிரப்படுவதை உறுதி செய்வதில் உலக சுகாதார ஸ்தாபனம் பங்களிப்பு செய்வதற்கான யோசனையையும் இந்தியா வழங்கியுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தினை சீர்திருத்தவேண்டியதன் அவசியத்தினை இந்தியா சர்வதேச அரங்கில் தொடர்ந்து வலியுறுத்துகின்றது.
குறிப்பாக கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதில் உலக சுகாதார ஸ்தாபனம் தோல்வியடைந்ததாக குற்றசாட்டுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியா உலக சுகாதார ஸ்தாபனத்தினை சீர்திருத்தம் செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.