November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் இந்தியாவின் ஏவுகணை பரிசோதனை வெற்றி

இந்தியாவில் அண்மைக்காலமாகவே ஏவுகணைகள்,நவீன ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட பல போர்க்கருவிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்திய எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ,அவ்வப்போது அத்துமீறல்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய ராணுவமும் தமது புது ரக போர்க்கருவிகளை பரிசோதனைக்கு உட்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தரையிலிருந்து வானுக்கு பாயும் நடுத்தர ரக ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது.

நான்கரை மீட்டர் நீளமுள்ள ஏவுகணைகள் மூலம் 60 கிலோ வரையிலான அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்குதல் நடத்தலாம் எனக் கூறப்படுகிறது.

இதன் தாக்குதல் இலக்கை 150 கிலோ மீட்டராக அதிகரிக்க டிஆர்டிஓ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்காக டிஆர்டிஓ இதனை உருவாக்கி உள்ளது.

இதன் மூலம் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எதிரி நாடுகளின் ட்ராேன்கள்,விமானங்கள் ,ஏவுகணைகளை தாக்கி அழிக்க முடியும் என கூறப்படுகிறது

எல்லா பருவ காலங்களிலும் 360 டிகிரி கோணத்தில் சுழலும் நவீன ரேடார் கருவி இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இலக்கை துல்லியமாக கண்டறிந்து தாக்குதல் நடத்த முடியும் எனக் கூறப்படுகிறது.

ஒடிசா கடற்கரைக்கு அருகே உள்ள சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து இன்று மாலை 4 மணிக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்த சாதனையை செய்தது.

விமானம் போன்ற ஆளில்லாத அதிவேக வான் இலக்கு ஒன்றை நேரடியாக வெற்றிகரமாக இந்த ஏவுகணை தாக்கி அழித்ததன் மூலம் முக்கிய மைல்கல்லை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் எட்டியது.

வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ள இந்த சோதனைக்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டுக்களை தெரிவித்தார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டியும் அவர்களை பாராட்டியுள்ளார்.