இந்தியா அடுத்தவாரம் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதியளிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒக்ஸ்போர்ட் நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்த அஸ்ட்ரா செனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அடுத்த வாரம் அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதிகாரிகள் கோரிய கூடுதல் தரவுகளை தடுப்பூசி நிறுவனம் அளித்துள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், அஸ்ட்ரா செனகா நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அஸ்ட்ரா செனகா நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ளது.
இதன் 3 கட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. இங்கிலாந்து, பிரான்ஸ் நாட்டில் இதன் சோதனைகள் நடத்தப்பட்டதில் முழு வெற்றியை பெற்றுள்ளது. இது 90 சதவீதம் சிறப்பாக செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தை இந்தியாவில் தயாரிப்பதற்கு புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் மருந்து நிறுவனம் அனுமதி பெற்றிருந்தது.
மேலும் மருந்தின் 2-வது,3-வது கட்ட சோதனைகளை இந்தியாவில் நடத்துவதற்கும் அனுமதி பெற்றது. அதன்படி 2-வது கட்ட சோதனை முடிந்து 3-வது கட்ட சோதனை நடந்து கொண்டிருக்கிறது.