July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் அளித்த ஸ்டாலின்

திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆளுநரைச் சந்தித்து, முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பலர் மீதான ஊழல் குறித்து புகார் அளித்துள்ளார்.

97 பக்கங்கள் கொண்ட இந்த ஊழல் புகார் பட்டியலில்,முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது நெடுஞ்சாலைத்துறை, இலவச அரிசி மற்றும் பினாமி பெயரில் சொத்துக்களை சேர்த்தது என்ற புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மீது காக்னிஷென்ட் கம்பெனி கட்டுமான அனுமதி மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது ஊராட்சிகளுக்கு எல்இடி விளக்குகள் வாங்கியதில் ஊழல் தொடர்பாகவும், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மீது தரமற்ற நிலக்கரி ஊழல் மற்றும் போலி மின்சார கணக்கு ஊழல் குறித்த புகார் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் என முதலமைச்சர் உட்பட 8 அமைச்சர்கள் மீது இந்த புகாரில் ஊழல் குற்றச்சாட்டு சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழக ஆளுநரிடம் ஊழல் புகாரை அளித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தற்போது வழங்கியது பார்ட்-1 தான் பார்ட் 2 விரைவில் வெளிவரும் என்று கூறியுள்ளார்.