July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு பஞ்சாப் மருத்துவர்கள், தாதியர்கள் ஆதரவு

இந்திய தலைநகர் புதுடெல்லியில் தொடரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப்பை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் தாதிமார்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப், அரியானாவைச் சேர்ந்த  விவசாயிகள் தொடர்ந்தும் 26 ஆவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவிகளை வழங்கப்போவதாக மருத்துவர்களும் தாதிமார்களும் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து வேளாண்மை மசோதாக்களை மத்திய அரசு திரும்ப பெற்றுவிட்டால் டிசம்பர் 23 ஆம் திகதி விவசாயிகள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் என்றும் அன்றையதினம் நாடு முழுவதும் மக்கள் மதிய உணவைத் தவிர்த்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறும் விவசாயிகள் சங்க மூத்த தலைவர் ராகேஷ் திகேத் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் 6 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்த விவசாயிகள் சங்கத்தினருக்கு மத்திய அரசு சார்பில் கடிதம் அனுப்பப்படவுள்ளது.

மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விவேக் அகர்வால் விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்குக் கடிதம் அனுப்பவுள்ளார்.

அந்த கடிதத்தில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் சங்கத்தினர் தங்களின் குறைகள் கவலைகள் சந்தேகங்களைக் கூறினால் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது.

அதற்கான திகதியைக் குறிக்கலாம். இதற்கான பேச்சுவார்த்தையை டெல்லி விஞ்ஞான் பவனில் நடத்தலாம்.

விவசாயிகள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க மத்திய அரசு தயாராக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.