பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் உடன்படிக்கை செய்துகொண்ட, இலங்கை உட்பட ஏனைய நாடுகளின் அனுபவங்களில் இருந்து நேபாளம் பாடம் கற்கவேண்டும் என இந்திய முப்படைகளின் பிரதானி ஜெனரல் பிபின் ராவட் தெரிவித்துள்ளார்.
நேபாளம் சர்வதேச விவகாரங்களில் சுதந்திரமாக செயற்படலாம். ஆனால் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் உடன்படிக்கை செய்துகொண்ட இலங்கை உட்பட ஏனைய நாடுகளின் அனுபவங்களில் இருந்து பாடம் கற்கவேண்டும். விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான உறவு இமயமலை போன்று உயர்ந்தது என தெரிவித்துள்ள பிபின் ராவத், இந்தியா தனது அயல்நாடுகள் குறித்து வெளிப்படுத்தும் நல்லெண்ணம் எந்த நிபந்தனைகளும் அற்றது எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் ஏனைய நாடுகளுடன் உடன்படிக்கைகளை செய்துகொள்ளும்போது காத்மண்டு எச்சரிக்கையுடன் செயற்படவேண்டும்.
இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு நட்புறவு மற்றும் மக்கள் மத்தியிலான தொடர்புகள் ஆகியன ஆழமானவை, விரிவானவை.
ஆனால் தற்போதைய யுகத்தில் நேபாளம் சீனா உட்பட ஏனைய நாடுகளுடன் தனது சுதந்திர வெளிவிவகார கொள்கையின் அடிப்படையில் உறவுகளை ஏற்படுத்தி வருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்