November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

36 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா: அவுஸ்திரேலியா 8 விக்கெட்டுக்களால் வெற்றி

photo: Twitter/ BCCI

இந்திய- அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்திய- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பகல்- இரவு ஆட்டமாக கடந்த வியாழக்கிழமை அடிலெய்டில் ஆரம்பமாகியது.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 36 ஓட்டங்களுடன் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டுள்ளது.

இந்நிலையில், 90 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய அவுஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 93 ஓட்டங்களைப் பெற்று, வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இந்திய அணி ஒரு இன்னிங்ஸில் பெற்றுக்கொண்ட மிகக் குறைந்த ஓட்டமாக இது பதிவாகியுள்ளது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 100 ஓவர்கள் விளையாடி, 244 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 191 ஓட்டங்களைப் பெற்று, ஆட்டமிழந்தது.

53 ஓட்டங்கள் முன்னிலையில் இந்திய அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் ஆரம்பமாகியது.

எதிர்பாராத விதமாக இந்திய அணியின் விக்கெட்டுக்கள் சரிய ஆரம்பித்தன. பிரித்வி ஷா 4 ஓட்டங்களுக்கு, மயங்க் அகர்வால் 9 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

அத்தோடு, இந்திய அணித் தலைவர் விராட் கோலி 4 ஓட்டங்களுக்கும், புஜரா, ரஹானே மற்றும் அஷ்வின் ஆகியோர் ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்துள்ளனர்.

இந்தியா 36 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்கள் என்றிருந்த நிலையில், மொஹமட் ஷமி காயம் காரணமாக வெளியேறியதோடு, இந்தியா ஆட்டத்தை நிறைவு செய்துகொண்டது.

அவுஸ்திரேலியாவுக்கான வெற்றி இலக்கு 90 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 2 விக்கெட் இழப்புக்கு 93 ஓட்டங்களைப் பெற்று, முதல் டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கு முன்னர், இங்கிலாந்துக்கு எதிராக 1974 ஆம் ஆண்டு இடம்பெற்ற டெஸ்டில் இந்தியா 42 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததே, மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகப் பதிவாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.