November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“நன்றாக இருக்கும் குடும்பத்தை கெடுப்பதுதான் கமலின் வேலை”: எடப்பாடி பழனிச்சாமி பதிலடி

”தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர் அரசியல் செய்தால் என்னவாகும். அவர் நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்க்கும் குடும்பம் கூட நன்றாக இருக்காது” என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந் நிலையில் ஆளும் அதிமுகவிற்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையில் மோதல் தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

அண்மையில் எம்ஜிஆர் மடியில் வளர்ந்தவன், எம்ஜிஆரின் நல்லாட்சியை தருவேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளதையடுத்து அதிமுகவிற்கும் அவருக்கும் இடையிலான மோதல் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் அரசாங்க அதிகாரிகள் இலஞ்ச ஒழிப்பு பொலிஸாரால் கைது செய்யப்படுவதை சுட்டிக்காட்டிய கமல்ஹாசன் அரசு எந்த வழியில் செல்கின்றதோ அரசாங்கம் அந்த வழியில் செல்வதை இது காட்டுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனின்  இந்த கருத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.

இதற்கு பதிலளித்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கையில்,

அரசாங்கம் தான் இலஞ்ச ஒழிப்பு கைது நடவடிக்கையை நடத்துகிறது. தமிழ்நாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகள் யார் மீது வருகிறது. அப்படியென்றால் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்றுதானே அர்த்தம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எங்கேயும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறுகளை தடுத்து நிறுத்தவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

அவர் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக இல்லை. நன்றாக இருக்கக்கூடிய குடும்பத்தை கெடுப்பதுதான் அவரது வேலை என்று அவர் கமல்ஹாசனை நோக்கி தெரிவித்துள்ளார்.

அத்தோடு எம்ஜிஆர் இருக்கும்போது பாடல்கள் மூலம் எவ்வளவோ நல்ல கருத்துகளை கூறினார். கமல்ஹாசன் ஒரு படத்திலாவது நாட்டு மக்களுக்கு நல்ல கருத்துகளை கூறியிருக்கிறாரா?

நன்மை செய்யக்கூடிய பாடல்களை பாடியிருக்கிறாரா. எனவே அவர் சொல்லக்கூடிய கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் முதலமைச்சர் பழனிச்சாமி பதலளித்திருந்தார்.