டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, இன்றைய தினம் திமுக சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி, அதன் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகளின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
இந்தப்போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஸ்டாலின்,
மத்திய பாஜக அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியிருப்பதை கண்டித்து, இன்றோடு 23 நாட்களாக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த சட்டத்தில் உள்ள ஆபத்தை புரியாமல், பல மாநிலங்கள் இதை ஆதரிக்கின்றன. பிற்காலத்திலேயே இதன் பாதிப்புகள் தெரியவரும் என்றார்.
ஆகவே இப்போதே ஒன்றுபட்டு இந்த சட்டங்களை திரும்பப் பெற வைக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த சட்டங்களை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.
மேலும் டெல்லியில் போராடி உயிரிழந்த 21 விவசாயிகளுக்கு திமுக கட்சியினரால் இரண்டு நிமிடம் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
"விவசாயிகளின் வாழ்வாதாரங்களை அழிக்கும் உள்நோக்கத்துடன் பாஜக – அதிமுக அரசுகள் கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டங்கள் தொடரும்"
– கழக தலைவர் @mkstalin அவர்கள் உரை.#DMKforFarmers pic.twitter.com/c2IbhpH8lo
— DMK (@arivalayam) December 18, 2020