November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சசிகலா விடுதலையாகும் தினத்தில் பெங்களூரில் விசேட பாதுகாப்புக்கு ஏற்பாடு

பெங்களூர் சிறையில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் சசிகலா விடுதலையாகும் தினத்தன்று, சட்ட ஒழுங்கினை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள குறித்த விபரங்களை பெங்களூர் நகர பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சசிகலா விடுதலை செய்யப்படும் திகதியை சிறை நிர்வாகம் முடிவு செய்து அறிவிப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறை வளாகத்தை சுற்றிலும் செய்ய வேண்டும் என பெங்களூர் பொலிஸார் திட்டனமிட்டுள்ளனர்.

சசிகலாவை வரவேற்று அழைத்து செல்வதற்கு ஏராளமான வாகனங்களில் தொண்டர்கள் வருவார்கள் என்பதால், அன்றைய தினம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் நகரின் எல்லையிலேயே வாகனங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என பெங்களூர் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை அவரது வாகனத்துக்கு தேவையான பாதுகாப்புகளை வழங்க வேண்டும் என பெங்களூர் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

அன்றைய சூழ்நிலையை பொறுத்து போக்குவரத்து மாற்றங்களை செய்து முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பெங்களூர் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சசிகலா விடுதலையில் சிறைத்துறை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடாமல் உள்ளது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார்? என்று கேட்டதற்கு ஜனவரி 27 ஆம் திகதி விடுதலை செய்யப்படுவார் என்று தெரிவித்து இருந்தது.

எனவே அதற்கு முன்பாக அவர் விடுதலை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவாகவே தெரிகிறது. சசிகலா விடுதலை தொடர்பாக அவருக்கு சிறைத்துறையில் இருந்து இன்னும் அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வரவில்லை என்று வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். சிறைத்துறையின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.