November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”விவசாயிகளின் போராடும் உரிமையில் எவரும் தலையிட முடியாது” : இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவிப்பு

புதிய விவசாய சட்டங்களை இரத்துச் செய்ய வேண்டுமென புதுடில்லியில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் போராடுவதற்கான உரிமையில் எவரும் தலையிடமுடியாது என இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுடில்லியின் நெடுஞ்சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அங்கிருந்து அகற்ற கோரியும், போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை ஆராய்ந்த பின்னர் இந்திய உச்சநீதிமன்றம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

குறித்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று ஆராயப்பட்ட போது, விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது என்றும், அதேசமயம் போராட்டம் எந்தவொரு தனிநபருடைய வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது என்றும் நீதிமன்றத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று போராட்டம் என்பது சொத்துக்களை அழிக்கவோ அல்லது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலோ அமையக் கூடாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை விவசாயிகளின் போராட்டத்திற்கு காரணமான சட்டங்களை நிறுத்தி வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.