July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழக மீனவர் விடுதலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் தலையிடவேண்டும்’

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டுவிட்டரில் ஸ்டாலின் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

கொவிட் 19 கட்டுப்பாடுகள் காணப்படுகின்ற தருணத்தில் இந்திய மீனவர்களை கைதுசெய்யும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை எதிர்பாராத அதேவேளை, கடும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள 36 மீனவர்களையும் அவர்களது உபகரணங்களையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமைக்கு நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.கவும் கண்டனம் வெளியிட்டுள்ளது.இதுதொடர்பில் தே.மு.தி.க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து சுமார் 400 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்கள் கச்சதீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். 4 விசைப்படகுகளில் இருந்த 28 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இலங்கை கடற்படையினரின் இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.