
File Photo: indiannavy.nic.in
இந்திய பெருங்கடல் பகுதியில் தற்போது பல்வேறு நாடுகளை சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பல்கள் பல்வேறு பணிகளுக்காக பெருங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
ஆனால் தற்போது வரையில் இந்திய பெருங்கடல் பிராந்தியம் அமைதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வலுவான இந்தியாவை உருவாக்குவதே இந்த தேடலின் நோக்கம் என முப்படைத் தலைமைத் தளபதி தெரிவித்துள்ளார்.
பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதியான, நிலையான பாதுகாப்பு சூழல் தேவை என்பதையும் அவர் வலியுறுத்தி இருக்கிறார் .
டெல்லியில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற மாநாட்டில் பேசிய பிபின் ராவத், இந்தியப் பெருங்கடல் பகுதியில் ராணுவ வியூகப் போட்டி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஏராளமான நாடுகள் அங்கு நிலை கொண்டுள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.
இந்திய பெருங்கடல் பகுதியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து முதல்முறையாக இந்திய முப்படைத் தளபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.