July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்பைன் ரக தானியங்கி துப்பாக்கி பரிசோதனை வெற்றி

ராணுவ வீரர்களுக்காக முற்றிலுமே இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கார்பையின் ரக தானியங்கி துப்பாக்கி சோதனை வெற்றி அளித்துள்ளதாக  பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்  (டிஆர்டிஓ) அறிவித்துள்ளது.

இந்திய பாதுகாப்பு படையினரின் உபயோகத்திற்காக உள்நாட்டிலேயே இந்த கார்பைன் ரக தானியங்கி துப்பாக்கி தயாரிக்கப்பட்டுள்ளது.

3 கிலோ எடை கொண்ட இந்த துப்பாக்கி சுமார் 100 மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்கை சுடும் திறன் கொண்டதாகும் என கூறப்படுகிறது.

இந்தத் துப்பாக்கி கோடையில் மிக அதிகமான வெப்பநிலையிலும், குளிர்காலத்தில் மிக உயரமான மலைப் பகுதியிலும் சோதித்து பார்க்கப்பட்டதில், இதன் சுடும் திறன் மிகத் துல்லியமாக இருந்ததாக கூறப்படுகிறது.

லக்னோவில் சமீபத்தில் நடந்த ராணுவக் கண்காட்சியில் இந்த 5.56 X 30 எம்எம் ரக கார்பைன் துப்பாக்கியை, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்தார்.

இந்தத் துப்பாக்கியின் பரிசோதனைகள் வெற்றி பெற்றதற்காக, டிஆர்டிஓ குழுவினருக்கு அதன் தலைவர் டாக்டர் சதீஷ் ரெட்டி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இந்தத் துப்பாக்கி கான்பூரில் உள்ள ஆயுத தொழிற்சாலையிலும், இதற்கான குண்டுகள் புனேயில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையிலும் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.