January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெல்லியில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்

இந்திய உள்துறை அமைச்சர் மற்றும் நிதி ஆயோக் தலைவர் இருவரும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நாடு முழுவதும் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் டெல்லி குளிரையும் மீறி அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

குறிப்பாக டெல்லியில் நடக்கும் முற்றுகைப் போராட்டம் மேலும் தீவிரம் அடைகிறது. மத்திய வேளாண் அமைச்சர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

இதன் விளைவாக நாளை சனிக்கிழமை நாடு தழுவிய அளவில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் செல்லும் போராட்டம் நடைபெறும் என்பது மத்திய அரசுக்கு சிக்கலான ஒன்றாக தான் இருக்க போகிறது.

ஏற்கனவே விவசாயிகள் நடத்திய பாரத் பந்த் நாடு தழுவிய அளவில் விவசாயிகள், தொழிற்சங்கத்தினர் மற்றும் எதிர்க்கட்சியினரால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

ஆனாலும் மத்திய அரசு சட்டத்தில் திருத்தங்களை மட்டுமே செய்ய முடியும் என்றும் சட்டத்தைத் திரும்பப் பெறப் போவதில்லை என்பதையும் கூறி வருகிறது.

இதனால் உள்துறை அமைச்சர் மற்றும் நிதி ஆயோக் தலைவர் இருவரும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்று குற்றச்சாட்டுகளை பதிவிடும் விவசாயிகள் புதிது புதிதாக போராட்டங்களை அறிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

இந்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து தற்போது நாடு முழுவதிலும் இருந்து விவசாய சங்கத்தினர் ,விவசாயிகள் டெல்லியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள் .

அதிலும் குறிப்பாக பஞ்சாப் ,ஹரியானா ,உத்தரப் பிரதேச விவசாயிகள் தங்களால் இயன்றவரை குடும்பத்தினருடன் டெல்லியை நோக்கி டிராக்டர்களிலும், கார்களிலும் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெல்லியை நோக்கி படையெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் இருந்து டெல்லி வரும் சாலையும் அரியானாவில் இருந்து டெல்லி வரும் சாலையும் முடக்கப்பட்டுள்ளது.

ஆகையால் டெல்லி நோக்கி வந்து கொண்டிருக்கும் விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரால் மற்ற மாநிலங்களில் இருந்து டெல்லி துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.