November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சீனாவுடனான உறவுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன’

சீனாவுடனான உறவு கடந்த 40 வருடங்களில் ஒருபோதும் காணப்படாத நெருக்கடியான நிலையில் உள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவுடனான உறவு மிக கடினமான காலகட்டத்தில் இருக்கிறது. அதிலும் இந்த ஆண்டு பெரிய அளவில் உறவு சீர்குலைந்துள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் அமைதியை பராமரிப்பதுதான் மற்ற துறைகளில் உறவு வளர்வதற்கு அடிப்படையாக அமையும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு.

எல்லையில் இதே நிலைமை நீடிப்பதை அனுமதிக்க முடியாது. பல ஆண்டுகளாக சீன உறவில் பிரச்சினைகள் இருந்தாலும் வர்த்தகம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் உறவு வளர்ந்து வந்தது. எல்லையில் அமைதியை பராமரிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

எல்லை பகுதிகளில் இருதரப்பும் பெருமளவு படைகளை குவிக்கக்கூடாது என்று கடந்த 1993-ம் ஆண்டில் இருந்தே ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. ஆனால், பல்லாயிரக்கணக்கான சீன துருப்புகளை முழு ராணுவ தயார்நிலையுடன் லடாக்கில் உள்ள எல்லை கோடு பகுதியில் சீனா குவித்துள்ளது.

இதற்கு சீனா 5 முரண்பட்ட விளக்கங்களை அளித்துள்ளது. இது ஒப்பந்தங்களை மீறிய செயல். இதனால் இயல்பாகவே உறவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் பலியானார்கள். அச்சம்பவம் நமது தேசிய மனநிலையை முற்றிலும் மாற்றி விட்டது. இந்த உறவை சரி செய்வது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.