October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியா ஜனநாயகத்தின் தாய் என ஏனைய நாடுகள் தெரிவிக்கும் நாள் வரும்’

ஜனநாயகம் குறித்து ஏனைய நாடுகள் இந்தியாவிற்கு கற்பிப்பது குறித்து இந்திய பிரதமர் நரேந்திரமோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் 21 ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு சேவையாற்றும் என தெரிவித்துள்ள மோடி அதனை ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

100 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட பழைய நாடாளுமன்ற கட்டிடம் நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்தது.ஆனால் புதிய கட்டிடம் நாட்டின் தேவைகளையும் அபிலாசைகளையும் பூர்த்தி செய்யும்.2014 இல் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நான் நாடாளுமன்றத்தில் நுழைந்த அந்த தருணத்தை என்னால் மறக்க முடியாது.இந்த ஜனநாயகத்தின் கோவிலுக்குள் காலடி எடுத்துவைப்பதற்கு முன்னர் அதற்கு தலை வணங்கினேன், சல்யூட் செய்தேன்.

உலகநாடுகள் இந்தியாவிற்கு ஜனநாயகம் பற்றி பாடம் எடுக்கின்றமை முரண்நகையான விடயம்.ஏனைய நாடுகள் ஜனநாயகத்தை பேசும்போது அவர்கள் தேர்தல் குறித்தும் நிர்வாக விடயங்கள் குறித்தும் மாத்திரம் பேசுகின்றன.

ஆனால் இந்தியாவில் ஜனநாயகம் புனிதமானது-ஒரு வாழ்க்கை முறை.பல நூற்றாண்டு அனுபவத்தின் ஊடாக இந்திய ஜனநாயகம் வளர்த்தெடுக்கப்பட்டது.அந்த அடிப்படையில்
இந்தியா ஜனநாயகத்தின் தாய் என ஏனைய நாடுகள் தெரிவிக்கும் நாள் வரும் எனவும் மோடி தெரிவித்துள்ளார்.