July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெல்லி விவசாயிகள் போராட்டம்: முக்கிய பேச்சுவார்த்தை ரத்து

photo: Facebook/ AIKSCCTamilnadu

இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும் விவசாய அமைப்புகளுக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விவசாயிகள் சங்கத் தலைவர்கள் டெல்லியில் நேற்று நடத்தியப் பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 40 சதவீத விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று பங்கேற்கவிருந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை  ரத்து செய்யப்பட்டுள்ளது.

விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நேற்று இந்திய உள்துறை அமைச்சர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்.

சுமார் நான்கு மணிநேரம் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தைகளின் போது மத்திய அரசாங்கம் புதிய விவசாய சட்டத்தினை மீளப்பெறாது என உள்துறை அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள விவசாயிகளின் பிரதிநிதிகள் தங்கள் போராட்டம் தொடரும் எனவும் 12ஆம் திகதி திங்களன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் எனவும் விவசாய சங்கங்கள் எச்சரித்து உள்ளன.

விவசாயிகளை சமரசம் செய்யும் வகையில் 3 வேளாண் சட்டங்களிலும் 3 முக்கிய திருத்தங்களை செய்யத் தயாராக இருப்பதாக அமித்ஷா தெரிவித்தார்.

மேலும் அந்த திருத்தங்கள் என்னென்ன என்ற விவரத்தை எழுத்து பூர்வமாக உறுதி செய்து கொடுக்கவும், மத்திய அரசு தயார் என்று உறுதியளித்தார். இதைக்கேட்டதும் விவசாய சங்க பிரதிநிதிகளில் பாதிப் பேர் அதை ஏற்றுக்கொண்டனர்.

ஆனால் பஞ்சாப் விவசாய சங்க பிரதிநிதிகள் அமித்ஷா தெரிவித்த கருத்தை உடனடியாக ஏற்கவில்லை.  இன்று  மதியம் விவசாயிகளுடன் கலந்து பேசிவிட்டு இதுபற்றி அதிகாரப்பூர்வமாக முடிவை தெரிவிப்பதாக கூறியிருந்தனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் இந்த  போராட்டம்  இன்று 14வது நாளாக  தொடருகிறது. சுமார் 40 விவசாய அமைப்புகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள்   டெல்லியில் திறந்த வெளியில்  போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.