photo: Facebook/ AIKSCCTamilnadu
இந்திய அரசாங்கத்தின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி விவசாயிகள் அழைப்பு விடுத்த, அகில இந்திய அளவிலான கதவடைப்புப் போராட்டம் இன்று இடம்பெற்று வருகின்றது.
இந்தியாவின் 11 மாநிலங்களில் முழுமையான ‘பாரத் பந்த்’ எனும் கதவடைப்புப் போராட்டம் இடம்பெற்று வருவதோடு, பெரும்பாலான மாநிலங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதோடு, வீதிப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
டெல்லி புறநகர்களில் விவசாயிகள் பிரதான வீதிகளில் குவிந்து, டெல்லிக்குள் செல்லும் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கேரளா, ஜார்க்கண்ட், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், சத்தீஷ்கர் மற்றும் புதுச்சேரி ஆகிய 11 மாநிலங்களில் முழு கதவடைப்புப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இதனால் டெல்லியை நோக்கி வந்த வாகனங்கள், கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளதோடு, மும்பை, லக்னோ உட்பட பல நகரங்களில் விவசாயிகளின் சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கதவடைப்பு போராட்டம் மற்றும் சாலை மறியலை பஞ்சாப் விவசாய அமைப்புகளின் தலைவர் தர்ஷன் பால் தலைமையேற்று நடத்தியுள்ளார்.
13 ஆவது நாளாகவும் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் விவசாயிகள், தமது போராட்டத்தில் அரசியல் கலப்பு இன்றி, அமைதியாக நடத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்தோடு, டெல்லியில் அசம்பாவித சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்ய பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
தமிழ்நாட்டில் சுமார் 400 இடங்களில் விவசாயிகளும் எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாவிட்டாலும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ‘கருப்பு சின்னம்’ அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 5 கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதோடு, வேளாண்மை சட்ட விவகாரத்தில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என்று விவசாய அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதேநேரம், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நாளை இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.