July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் நாடளாவிய ரீதியில் விவசாயிகள் கதவடைப்பு போராட்டம்

இந்தியாவில் நாளை நாடளாவிய கதவடைப்பு போராட்டம் 11 மணிமுதல் இடம்பெறும் என அறிவித்துள்ள விவசாய அமைப்புகள், இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காது எனவும் குறிப்பிட்டுள்ளன.

இந்திய மத்திய அரசின் புதிய விவசாய சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து,கடந்த பத்து நாட்களாக புதுடில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், நாளை அகில இந்திய ரீதியில் கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

விவசாயிகளின் வேண்டுகோளிற்கு தமிழக எதிர்க்கட்சிகள் பல ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் விவசாயிகளின் வேண்டுகோளிற்கு ஆதரவு கிடைத்துள்ளது.

விவசாயிகள் போராட்டத்திற்கு திரிணாமுல் காங்கிரஸைத் தவிர அனைத்து எதிர்க்கட்சிகளும் – சிவசேனா காங்கிரஸ் தி.மு.க கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், ஆம் ஆத்மி கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

இந்தியாவின் அனைத்து மோட்டார் போக்குவரத்து தொழிற்சங்கங்களும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.

டாக்ஸி தொழிற்சங்கங்கள் பணிநிறுத்தத்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளதால் டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பயணிகள் சிக்கல்களை சந்திக்க நேரிடும். பல வங்கித் தொழிற்சங்கங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அமைதியாக நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். அவசர சேவைகள் எதுவும் பாதிக்கப்படாது என போராட்டம் நடத்தும் விவசாய அமைப்புகள் கூறி உள்ளன.

விவசாய அமைப்புகளின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் கூறியதாவது;

எங்கள் எதிர்ப்பு அமைதியானது. அப்படியே தொடரும். வன்முறையற்ற முறையில் தங்கள் ஆதரவை வழங்குமாறு மக்களை வலியுறுத்தி உள்ளோம். அவர்களின் எதிர்ப்பு சாமானிய மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது.

“நாளைய முழு கடையடைப்பு காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் .இது ஒரு அடையாள எதிர்ப்பு. நாங்கள் காலை 11 மணிக்குத் தொடங்குவோம், எனவே அனைவரும் சரியான நேரத்தில் அலுவலகத்தை அடைய முடியும் … ஆம்புலன்ஸ், திருமணங்கள் போன்ற சேவைகளும் தொடரலாம். மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை தொடரலாம்”.