
இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினைக்குத் துரித தீர்வைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாத்தறை, கந்தர மீன்பிடித் துறைமுகத்தின் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைத்து, உரையாற்றும் போதே, பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக தலையிட்டு, தீர்வைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
300 மீட்டர் நீளமான பிரதான நங்கூரமிடும் தளத்தை கொண்ட உத்தேச மீன்பிடி துறைமுகத்தில், சுமார் 400 மீன்பிடிப் படகுகள் மீன்பிடி நடவடிக்கைளை முன்னெடுக்கலாம் என்பதையும் பிரதமர் மகிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
துறைமுக கட்டுமானப் பணிகளை 36 மாதங்களுக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாகவும், இதற்கு 6,667 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு முதல் நல்லாட்சி அரசாங்கம் மீனவர்களுக்கு வருமான வரி சுமத்தியதாகவும், இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தாம் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு மீனவர்களை வருமான வரியிலிருந்து விடுவித்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிகழ்வில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, டளஸ் அழகப்பெரும, ஜீ.எல்.பீரிஸ், இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான நிபுன ரணவக்க, கருணாதாச கொடிதுவக்கு, வீரசுமன வீரசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.