November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆந்திராவில் பரவும் மர்ம நோய்: ‘300 க்கு மேற்பட்டோர் பாதிப்பு’

photo: Facebook/ YS Jagan Mohan Reddy

இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் புதிய வகை மர்ம நோயொன்றினால் 300 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

ஆந்திரப் பிரதேசம், மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள ஏலூர் நகரில் அடையாளம் காணப்படாத, ஒரு வித நோயால் 3 பேர் பலியாகியுள்ளதுடன், 300 க்கு மேற்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மயக்கம், தலைசுற்று, வாந்தி, நடுக்கம், கீழே விழுதல் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் கண் எரிவு, வாந்தி போன்றன ஏற்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்துக்கு விசேட மருத்துவ குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், நோயாளிகளின் இரத்த மாதிரிகளில் வைரஸ் அறிகுறிகள் தென்படவில்லை என்றும் மருத்துவத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீர் அல்லது வாயு மாசடைவால் இந்த நோய் நிலைமை ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சரோடு கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் கூறியுள்ளார்.

ஆந்திர பிரதேசம் கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய நோய்ப் பரவல் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.