July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி அளிக்குமா?

பைசர்-பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியை இந்தியாவில் அவசர தேவை கருதி பயன்படுத்த அனுமதி அளிக்கும்படி அந்த நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு ஏற்கனவே பிரிட்டன், பஹ்ரைன் ஆகிய நாடுகள் அனுமதி வழங்கிவிட்டன.

இந்நிலையில், தமது தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதிக்கும்படி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் (DCGI) பைசர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இந்திய மருந்து பரிசோதனை சட்ட விதிமுறைகளின் கீழ், இந்திய மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்வதை தவிர்த்துவிட்டு, அவசர தேவை கருதி மருந்தை இறக்குமதி செய்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று பைசர் நிறுவனம் கோரியுள்ளது.

இந்த விண்ணப்பம் தொடர்பில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு மூன்று மாதங்களுக்குள் முடிவை அறிவிக்க வேண்டும்.

பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை, மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பதப்படுத்தி வைத்திருக்க வேண்டும். இந்தியா போன்று கிராமப்புறங்களை அதிகம் கொண்டுள்ள நாடுகளில், அதற்கான குளிர்பதன வசதிகளை ஏற்படுத்தி பராமரிப்பது பெரிய சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் 2019 இல் நடைமுறைக்கு வந்த மருந்து தயாரிப்பு மற்றும் ஆய்வு விதிமுறைகளின் படி, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றில் ஏதாவது ஒரு நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மருந்துக்கு, இந்திய மக்களிடம் பரிசோதனை செய்யப்படாமலேயே அனுமதி வழங்கமுடியும்.

ஆனால் சம்பந்தப்பட்ட மருந்துக் கம்பனிகள், தங்களது மருந்தின் நீண்டகால தாக்கங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக, பின்னர் மருத்துவ ஆய்வுகளை செய்ய வேண்டியது அவசியம்.