நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது குறித்து தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருப்பது அவரது சொந்த கருத்து என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் புதிய கட்சி ஆரம்பிப்பது குறித்து தகவல் வெளியிட்ட பின்னர் சூழ்நிலையை பொறுத்து அவருடன் கூட்டணி அமையலாம் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார்.
துணை முதல்வரின் இந்த கருத்து தமிழக அரசியலில் பல கேள்விகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
இதேவேளை சென்னையில் பேட்டி அளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.எஸ்ஸின் கருத்து அவரது சொந்தக் கருத்து. ரஜினி கட்சி தொடங்குவது குறித்து யாரும் கருத்தைச் சொல்லலாம். எம்.ஜி.ஆர் மிகப்பெரிய தலைவர். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. அவரோடு ஒப்பிட்டுக் கூறுவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.
ரஜினியின் கட்சி அறிவிப்பு குறித்து முதல் அமைச்சர் பழனிசாமியிடம் கேட்டபோது ரஜினி கட்சியைப் பதிவு செய்யட்டும். அதற்குப் பிறகு கேளுங்கள். அவர் அறிவிப்பு மட்டுமே செய்துள்ளார். ரஜினி கட்சியைப் பதிவு செய்தவுடன் வந்து கேளுங்கள். நான் பதில் சொல்கிறேன். அதுதான் சரியாக இருக்கும். ஓ.பன்னீர் செல்வம் அவரது சொந்த கருத்தைச் சொல்லியிருக்கிறார். அனைவருக்கும் கருத்துச் சொல்ல உரிமை உள்ளது” என்று தெரிவித்தார்
ஆளும் அதிமுகவிடமிருந்து இவ்வாறு முரண்பாடான கருத்துக்கள் வெளியாகியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள தமிழக அரசியல் வட்டாரங்கள், தேர்தலிற்கு முன்பாக அதிமுகவிற்குள் உள்முரண்பாடு தீவிரமடைகின்றதா என கேள்வி எழுப்பியுள்ளன.