July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெல்லி விவசாயிகள் போராட்டம்: “ஏழைத்தாயின் மகனுக்கு தெரியாதா?” – ஸ்டாலின் கேள்வி

(Photo: DMK/Twitter)

விவசாயிகளைப் பற்றி கவலைப்படாமல் ஜனநாயகத்தை மதிக்காமல் மத்திய பாஜக அரசு செயற்படுகின்றது. ‘ஏழைத்தாயின் மகன்’ எனக்கூறும் பிரதமர் மோடிக்கு தெரியாதா விவசாயிகளின் போராட்டம் பற்றி? என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், சட்டங்களுக்கு எதிராக டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தி.மு.க சார்பில், தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்போது சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின் மேலும் கூறியதாவது,

‘டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு பாராட்டையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு விவசாயப் போராட்டம் நடைபெற்றதில்லை. விவசாயிகளைப் பற்றி கவலைப்படாமல் ஜனநாயகத்தை மதிக்காமல் மத்திய அரசு உள்ளது” என்றார்.

மேலும், பெரும்பான்மை உள்ளது என்ற ஒரே காரணத்துக்காக விவசாய விரோத சட்டங்களை மோடி அரசு நிறைவேற்றியுள்ளது.

மக்களைக் காப்பாற்றக்கூடிய விவசாயிகளை மரணக்குழியில் தள்ளலாமா?, விவசாயிகள் போராடுவது ஏழைத்தாயின் மகன் எனக்கூறும் மோடிக்கு தெரியாதா?என்றும் ஸ்டாலின் கேள்வியெழுப்பினார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என மோடி தெரிவித்தார். ஆனால் இருந்த வருமானமும் அவர்களுக்கு போய்விட்டது.

3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் தொடர வேண்டும். விவசாயிகளை அழைத்து பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

ஜனநாயகத்திற்கு கட்டுப்பட்ட கட்சி என்பதை பாஜக இதன்மூலம் நிரூபிக்க வேண்டும். ஏழைத்தாயின் மகன் என்பது உண்மையானால் பிரதமர் மோடி இந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். அதுவரை விவசாயிகளின் போராட்டத்திற்கு திமுக துணை நிற்கும்’என்றார்

அத்தோடு பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக மோடி கூறியிருந்தார். ஆனால், நாட்டில் ஆண்டுக்கு 10,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

விவசாயிகள் போராட்டத்தை எதிர்க்கட்சியினர் தூண்டிவிடுவதாக முதலமைச்சர் எடப்பாடி கூறுகிறார். எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுவதாக டெல்லி சென்று விவசாயிகளிடம் கூறமுடியுமா? விவசாயிகள் போராட்டம் வெற்றி பெறக் கூடாது என அ.தி.மு.க செயல்படுகிறது. என்றும் அவர் தெரிவித்தார்.

டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெறும் கருப்பு கொடி போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருவதும் குறிப்பிடத்தக்கது.