October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமித் ஷாவின் வருகையும் ,ரஜினியின் புதுக் கட்சியும்…

இவ்வளவு காலமும் “அரசியலுக்கு வருவேன், அரசியலுக்கு வருவேன்” என்று சொல்லிக்கொண்டிருந்த ரஜினிகாந்த், ஒருவழியாக ஜனவரியில் கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும், அதற்கான தேதியை டிசம்பர் இறுதியில் அறிவிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இது மனமுவந்து இவராக செய்த முடிவா? அல்லது சென்ற மாதம் அமித்ஷா அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து விட்டுச் சென்றதன் விளைவா? என்பது தெரியவில்லை.

ஏனெனில் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதாவும் கலைஞரும் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே ரஜினிகாந்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும், எதிர்பார்ப்பும் அவரைக் கண்டு அரசியல் கட்சிகளுக்குப்  பயமும் இருந்தது.

ஆனால் இன்றோ திராவிடம் மெல்ல விழுந்து, தமிழ் முழக்கமும் அதைச் சார்ந்த இயக்கங்களும் வலுப்பெற்று இருக்கும் இந்த காலகட்டத்தில் இவருக்கான ஓட்டுவங்கி எப்படி இருக்கும் என்பதை யோசிக்க வேண்டும்.

மறுபுறம் இவருடைய சக தோழரான கமல் அவர்கள் கட்சியும் இருக்கிறது.ஆனால் அது நாம் தமிழர் கட்சியை போன்று அழுத்தமான செயல்பாடுகளில் இல்லை. ஷூட்டிங் இல்லை என்றால் கட்சி, வருமானம் வருவதாக இருந்தால் கால்சீட், என்று அங்கு ஒரு கால் இங்கு ஒரு காலுமாகவே கமல் இருக்கிறார்.

அதைப்போன்றே ரஜினி அவர்களின் கட்சி இருக்குமா? என்பது வாக்காளர்களின் எண்ணம்.

இல்லை முழுநேர அரசியலாக, முழுநேர கட்சியாக மக்களுக்காக தொடர்ந்து பாடுபடும் எண்ணத்தில் அவர் இருந்தார் என்றால், அவருக்கு எதிரணியில் இருக்கும் திமுக மற்றும் அதிமுக வையும் அவர் கவனிக்க வேண்டும்.ஏனெனில் திமுக இந்த முறை ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது.

அடுத்து அதிமுகவிற்கு தலைமை இல்லை என்று சொல்லப்பட்டாலும் கூட ஓபிஎஸ், சசிகலா, வலுவான எதிர்க் கட்சியான திமுகவின் ஸ்டாலின், கட்சிக்குள் இருக்கும் மற்ற பிரச்சனைகள், தினகரன், திவாகரன், அமித் ஷா என எல்லோரையும் சமாளித்து வெற்றிகரமாக ஆட்சியை நடத்திக் கொண்டு எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று பிஜேபியின் செல்லப்பிள்ளையாக இருக்கும் எடப்பாடி ஒருபுறம்.

இப்படி நெருக்கடியான காலகட்டத்தில் இவர் எந்த நம்பிக்கையில் கட்சி ஆரம்பிக்க இருக்கிறார் என்பது அனைவரின் முன் இருக்கும் கேள்வி.

ஆனால் “ஆட்சி மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை” என்று முழக்கத்துடன் வரும் ரஜினி , தேர்தல் களப் பணிகளை ஒரு வருடத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்ட அதிமுக மற்றும் திமுகவை பற்றி எவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருக்கிறார் என்பதும் தெரியவில்லை.

இது இப்படி என்றால் மற்றொரு புறம் திமுகவுடன் கூட்டணி வைப்பாரா, அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைப்பாரா, அல்லது கமலுடன் கூட்டணி வைப்பாரா, அல்லது நாம் தமிழர் சீமான் உடன் கூட்டணி வைப்பாரா, என எண்ணற்ற கேள்விகள்.

ஒருவேளை இவர் கட்சியும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டால்  வாக்குகள் நிறைய கிடைக்கும். ஆனால் ஆட்சி  அமைக்கும் பெரும்பான்மை பெற முடியுமா? என்பது சந்தேகமே. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அதிமுகவுடனோ அல்லது திமுகவுடனோ கூட்டணி வைத்தால், கண்டிப்பாக இவர் மேல் இருக்கும் நம்பகத்தன்மை மக்களுக்கு போய்விடும்.

ஒருவேளை கமலைப் போன்று தனித்துப் போட்டியிட்டால் ஓட்டுகள் பிரிந்து அதிமுக அல்லது திமுக ஆட்சி அமைப்பதற்கு வழிவகுக்கும். ஆகையால் ரஜினி அவர்கள் மிக கவனமுடன் செயல்பட வேண்டிய காலம் இது.