January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

புதிய கட்சியைத் தொடங்குவதற்கான அறிவிப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் எனவும் அவர் உறுதியாகக் கூறிருக்கிறார்.

மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று, நேர்மையான நாணயமான ஆன்மீக அரசியல் உருவாகும் எனவும் 2021 தமிழகத்தில் அதிசயம், அற்புதம் நிகழும் எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகும் என அவர் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கட்சியை ஆரம்பித்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக  2017 ஆம் ஆண்டு அவர் அறிவித்திருந்தார்.

புதிய கட்சியை தொடங்க உள்ளதாக கூறி மூன்று வருடங்களின் பின்னர், தற்போது சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அவர் மீண்டும் கூறியிருக்கிறார்.

இருந்தபோதிலும் அடுத்த வருடம் ஜனவரியில்,அவர் முழுமையாக இதில் போட்டியிட போகிறாரா இல்லை மீண்டும் பின்வாங்கப் போகிறாரா என்பது தெளிவாகும் என பேச்சுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

தற்போது தமிழகத்தில் அவரது ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றங்களாக மாற்றி, மாவட்டம் தோறும் புதிய நிர்வாகிகளை நியமித்திருக்கிறார்.

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு, தேர்தலுக்குத் தயாராகி வருவதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.

கொரோனா கட்டுப்பாடுகள் நிறைவுற்றதும்,மாநாடு நடத்தி கட்சியின் பெயரை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘தமிழகத்தில் சிஸ்டம் சரி இல்லை’ என 2017 ஆம் ஆண்டு முதலே ரஜினிகாந்த் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி ,ஜெயலலிதா ஆகியோரின் மறைவைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும் ரஜினிகாந்த் தொடர்ந்து கூறி வந்தார்.

இந்நிலையில் “இப்போ இல்லேன்னா,எப்பவும் இல்ல”என ரஜினிகாந்த் உருவாக்கிய ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது .