2021 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் .
சென்னை ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசன் முன்னிலையில் விருப்பு ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு என்பவர் மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு கட்சியில் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன் என கூறியிருக்கிறார் .
ரஜினிகாந்த் தற்போது தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து இருக்கிறார். இந்நிலையில் அவர் கட்சி தொடங்க இருக்கிறார் என பல யூகங்கள் சமூக வலைத்தளங்களிலும் ,தொலைக்காட்சிகளிலும் ,அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் பரவலாக பேசப்படுகிறது.
ஆனால் ரஜினிகாந்த் தனது முடிவை அறிவிக்காமல் காலம் தாழ்த்துவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இருந்தாலும் அவரது அரசியல் பிரவேசத்திற்கு பலர் காத்திருப்பதாகவே கருதப்படுகிறது.
இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்கப் போவதாக கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.
தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன் கூட்டணி அமைத்து வாழ்நாள் முழுவதும் கொத்தடிமையாக இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு, தமிழகத்தின் ஆளும் கட்சிக்கு அல்லது மத்தியில் ஆளும் பஜகவுக்கு ஆதரவு வழங்குவாரா ?இல்லை தன்னிச்சையாக போட்டியிடுவாரா எனப் பல கேள்விகள் தற்சமயம் எழுந்துள்ளன.